சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்திய நிலையில், நாட்டு மக்களுக்கு தேசியக்கொடி கிடைக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள 1.6 லட்சம் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி இருக்கிறது.
நாடு சுதந்திரமடைந்து கடந்தாண்டு 75-வது ஆண்டு தொடங்கியது. இதையொட்டி, நாட்டு மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வை தூண்டும் வகையிலும், பாரத தேசத்தின் மீதான பெருமித உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி, அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, கடந்தாண்டு 23 கோடி குடும்பங்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி, அமிர்தப் பெருவிழாவை கொண்டாடினர். இவர்களில் 6 கோடி பேர் தேசியக்கொடி ஏற்றியதை செல்ஃபி எடுத்து. சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதற்காக, நாட்டு மக்களுக்கு தேசியக்கொடி தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்து நிகழாண்டோடு 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, அதே ஆர்வத்தையும், தேசபக்தியையும் தொடரும் வகையில், இந்த ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடுமாறு பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதையொட்டி, நிகழாண்டும் நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடின்றி தேசியக்கொடி கிடைக்கும் வகையில், நாட்டிலுள்ள 1.6 லட்சம் அஞ்சலகங்கள் மூலம் தேசியக்கொடிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று முதல் அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி இருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சலகத்திற்குச் சென்று தேசியக்கொடிகளை வாங்கிக் கொள்ளலாம். மேலும், இ-போஸ்ட் வசதி (www.epostoffice.gov.in) மூலமாகவும் மக்கள் தேசியக்கொடிகளை வாங்க முடியும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்துடன் நாட்டு மக்களை இணைக்க அஞ்சலகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது. இவற்றில் நாட்டு மக்கள் பங்கேற்று புதிய இந்தியாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அஞ்சல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும், கடந்தாண்டைப் போலவே, நிகழாண்டும் நாட்டு மக்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியுடன் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.