மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 1,610 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக கூகி இனத்தவருக்கும், மைத்ரே இனத்தவருக்கும் வன்முறை வெடித்தது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், மாநில போலீஸாரும், இராணுவமும் வன்முறையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில்தான், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 1,610 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மணிப்பூரில் கடந்த மே மாதம் கலவரம் வெடித்தது. இதையடுத்து, இந்தியா – மியான்மர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும், எல்லை பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் தீவிரவாதிகளை பிடிக்கும்போது, போதைப் பொருள் கடத்தல்காரர்களையும் பிடிக்கின்றனர். அந்த வகையில், கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும், 1,610 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.