இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில், மேற்கு இந்தியத் தீவு அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்டாடி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இதன் முதல் இரு ஆட்டங்களிலும் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. அந்த அணி டிரினிடாட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், கயானாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது.
இந்நிலையில், 3-வது ஆட்டம் கயானாவில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. மேற்கு இந்தியத் தீவு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ் மேன் பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்பின் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணிக்கு
களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், ஷுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா 34 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில் சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா கூட்டணி அமைத்தனர்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியதுடன், 44 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடி 87 ரன்கள் சேர்த்து, சரிவில் இருந்து அணியை மீட்டெடுத்தனர். இதன் பின், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மாவுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
திலக் வர்மா 49 ரன்களும், பாண்ட்யா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது இந்திய அணி.