நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி ஏற்பட்டு, வன்முறை வெடித்திருப்பதால், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் வெளியேறும்படி, இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் தற்போது இராணுவ புரட்சி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 6 நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது. தற்போது 7-வது நாடாக நைஜர் நாட்டிலும் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில், அதிபர் முகமது பாஸும் தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டில் பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்களும், இராணுவமும் அதிபர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நைஜர் நாட்டில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. மேலும், அந்நாட்டு அதிபர் முகமது பாஸுமையும் இராணுவம் கைது செய்திருக்கிறது. இதனால், அதிபரின் ஆதரவாளர்கள் இராணுவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். அதேசமயம், பொதுமக்களில் மற்றொரு தரப்பினர் இராணுவத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, அந்நாட்டில் இராணுவத் தரப்பினருக்கும், அதிபர் தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறி இருக்கிறது. ஆகவே, வன்முறை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு, அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் வெளியேறும்படி, இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறுகையில், “நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நாட்டின் நிலவரம் தற்போது மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆகவே, அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறும்போது மிகவும் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
அதேபோல, அந்நாட்டின் நிலவரம் தற்போது கலவரமாக இருப்பதால், அந்நாட்டுக்கு பயணம் செய்ய திட்டமிட்டவர்கள், திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். அந்நாட்டில் நிலைமை சீராகி, இயல்பு நிலை திரும்பியவுடன் பயணத்தை மேற்கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.