பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் எவ்வித சவால்களையும் சமாளிக்கும் வகையில், ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தி இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகள் எப்போதும் பதற்றம் நிறைந்ததாகவே இருக்கின்றன. கார்கில் உட்பட சில இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. அதேபோல, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீனாவுக்கும், இந்தியா பதிலடி கொடுத்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில், மேம்படுத்தப்பட்ட இராணுவ தளவாடங்களை இந்தியா நிலைநிறுத்தி வருகிறது. மேலும், தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், சுரங்கப் பாதைகளையும் இந்தியா அமைத்து வருகிறது. குறிப்பாக, கார்கில் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையில் மிக்-21 ரக போர்விமானங்களையும், கல்வான் சம்பவத்திற்குப் பிறகு, லடாக் எல்லையில் மிக்-29 ரக போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தியது.
இந்த நிலையில், திடீரென ஸ்ரீநகரிலும் மிக்-29 ரக போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தி இருக்கிறது. இதனால், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பால்கோட் தாக்குதலின்போது பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை, தாக்கி அழித்த மிக்-21 ரக போர் விமானத்தை விட, அதிக திறன் கொண்டது மிக்-29 ரக போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விமானப் படைப் பிரிவுத் தலைவர் விபுல் சர்மா கூறுகையில், “காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதியாக ஸ்ரீநகர் விளங்குகிறது. மேலும், தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயரமான பகுதியில் அமைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிக எடை, உந்துதல் திறன், எதிரிகளின் ஊடுருவலுக்கு குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்ற மூலோபாய ரீதியாக மிக்-29 ரக போர் விமானம் மிகவும் சிறந்தது. ஆகவே, மிக்-29 ரக போர் விமானம் ஸ்ரீநகரில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.