மத்தியப் பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கமல்நாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்திற்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்த போது, பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆளும் பா.ஜ.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மேலும், கர்நாடகாவில் ஏற்கெனவே இருந்த பா.ஜ.க. ஆட்சி குறித்தும் விமர்சித்துப் பேசினார்.
இந்த சூழலில், பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அக்கடிதத்தில், மாநில அரசுக்கு 50 சதவிகித கமிஷன் வழங்கிய பிறகே, தங்களுக்கான நிதி வழங்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
பிரியங்கா காந்தியின் இப்பதிவையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் உட்பட பல்வேறு தலைவர்களும் வெளியிட்டிருந்தனர். இதையடுத்து, மாநில அரசு மற்றும் பா.ஜ.க.வின் புகழை கெடுக்கும் வகையில், தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் பதிவிட்டிருப்பதாகக் கூறி, இந்தூர் மாவட்ட பா.ஜ.க. சட்டப் பிரிவைச் சேர்ந்த நிமேஷ் பாடக் என்பவர், சம்யோகித் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில், பிரியங்கா காந்தி, கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் பதிவுகள் குறித்த உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தனர்.