பிரான்ஸ் நாட்டிலுள்ள புகழ்பெற்ற ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் அமைந்திருக்கிறது. 1888-ம் ஆண்டு தொடங்கிய இக்கட்டுமானப் பணி, 1889-ல் நிறைவடைந்து பொதுமக்களின் பார்வைக்காக திறந்து விடப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் ஈபிள் டவரை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் சுற்றிப் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், கடந்தாண்டு மட்டும் 62 பேர் ஈபிள் டவரை பார்வையிட்டிருக்கிறார்கள்.
இந்த சூழலில்தான், ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஈபிள் டவரின் 3 தளங்களிலும் இருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் சுமார் 2 மணி நேரம் சல்லடை போட்டு தேடினர். எனினும், வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதன் பிறகே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஈபிள் டவரை பராமரித்து வரும் என்.இ.டி.இ. அமைப்பினர் கூறுகையில், “வெடிகுண்டு மிரட்டல் தகவலைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர், ஈபிள் டவரின் மாடியில் அமைந்திருக்கும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்” என்றார்கள்.
ஈபிள் டவரில் கடந்த 2020-ம் ஆண்டு இதேபோல வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.