செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாரை, கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.
தற்போதைய தி.மு.க. அமைச்சரவையில், இலாகா இல்லாத அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், 2011 – 16 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார், உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட பலரும், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் வசூலித்து ஏமாற்றினர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மறு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில், பண மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறையினரும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக, அமலாக்கத்துறையினரும் தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த மே மாதம் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனிடையே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பிக்கும் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இருவரும் ஆஜராகாத நிலையில், மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. பலமுறை சம்மன் அனுப்பியும் இருவரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, கடந்த மாதம் 13-ம் தேதி, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது அசோக் குமார் வீட்டில் இல்லை. அதேசமயம், செந்தில் பாலாஜி வீட்டில் இருந்தார். இந்த சூழலில், சோதனை முடிவில், 14-ம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன் பிறகு, நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை, ஆட்கொணர்வு மனு என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின.
பின்னர், சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 7-ம் தேதி செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். பிறகு, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அவரிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தினர். விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
விசாரணையின்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தெரியாது என்று பதிலளித்த செந்தில் பாலாஜி, தனது தம்பி அசோக் குமாருக்குத்தான் எல்லாம் தெரியும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, விசாரணைக்கிடையே அசோக் குமார் இராம் நகரில் புதிதாக கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்தது எப்படி என்று சார் பதிவாளருக்கு சம்மன் கொடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அசோக் குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, புதிய வீட்டில் சம்மனை ஒட்டிவிட்டுச் சென்றனர்.
இந்த நிலையில்தான், பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாரை, கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் சட்ட விரோத பணப் பரிமாற்றம், 25 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்தது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.