ஹரியானா மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வன்முறை காரணமாக நின்றுபோன ஊர்வலத்தை, ஆகஸ்ட் 28-ம் தேதி மீண்டும் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்திருக்கிறது.
ஹரியானா மாநிலம் குருகிராம் அருகேயுள்ள நூஹ் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் “பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை” கடந்த மாதம் நடந்தது. இந்த ஊர்வலத்தை குருகிராம் சிவில் லைன்ஸிலிருந்து பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கேத்லா மோட் அருகே சென்றபோது, இஸ்லாமிய இளைஞர்கள் கும்பல் ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியது. மேலும், ஊர்வலத்தைத் தொடர விடாமல் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீவைத்தனர்.
இதையடுத்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட 2,500 பேர் அருகிலுள்ள காவல் நிலையத்திலும், கோயில்களிலும் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை ஒடுக்க முயன்றனர். ஆனால், வன்முறையாளர்கள் போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீர்ர்கள் இருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, இணைய வசதியும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதன் பிறகு, வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் வீடுகள் மற்றும் எங்கெல்லாம் இருந்து கல்வீசினார்களோ அக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்களையும் மாநில அரசு இடித்துத் தள்ளியது. இந்த சூழலில்தான், பாதியில் கைவிடப்பட்ட ஊர்வலத்தை மீண்டும் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக, விவாதிக்க, சர்வ் ஹிந்து சமாஜ் என்கிற அமைப்பு சார்பில், பல்வால் – நூங் எல்லையிலுள்ள பாண்டிரி கிராமத்தில் மகா பஞ்சாயத்து கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில்தான், பாதியில் தடைபட்ட ஊர்வலத்தை வரும் 28-ம் தேதி நூஹ் மாவட்டம் நல்ஹர் என்கிற இடத்தில் இருந்து மீண்டும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இப்பகுதியில் நடக்கும் மோதல்களுக்குப் பசுக் கடத்தல்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆகவே, நூஹ் மாவட்டத்தில் துணை ராணுவப் படையின் தலைமையகம் அமைக்க வேண்டும். நூஹ் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். கலவரத்தால் ஏற்பட்ட இழப்பைக் குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். நூஹ் மற்றும் பல்வால் மக்களின் தற்காப்புக்காக அரசு சார்பில் ஆயுதம் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.