ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் சகோதரர் ஒருவர், தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய காணொளி மற்றும் புகைப்படங்கள் வைரலான நிலையில், மற்றொரு தீவிரவாதியின் சகோதரரும் குடும்பத்துடன் தேசியக்கொடி ஏற்றிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிவந்த நிலையில், 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதன் பிறகு, தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியது. இதன் தொடர்ச்சியாக, இராணுவம், துணை ராணுவப்படை, எல்லை பாதுகாப்புப்படை, மாநிலக் காவல்துறை ஆகியவற்றை முடுக்கி விட்டது.
இதன் பயனாக, ஜம்மு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். பலரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். விளைவு, தீவிரவாதம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. தீவிரவாதிகளின் கொட்டமும் ஒடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட் சமூகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும், அம்மாநிலத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும், சுற்றுலாப் பயணிகளும் ஜம்மு காஷ்மீருக்கு அச்சமின்றி சென்று வருகின்றனர். அதோடு, காஷ்மீரில் தீவிரவாத அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்களும், தைரியமாக வெளியே வரத் தொடங்கி இருக்கின்றனர். சமீபத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், புல்லட் பைக்கை ஓட்டி வருவதுபோல காணொளியை வெளியிட்டு, ஜம்மு காஷ்மீர் சுதந்திர பூமியாகி விட்டது. இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் சாத்தியமானது. நன்றி மோடிஜி என்று எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், நாட்டின் 77-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜம்மு காஷ்மீர் மக்களும் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணியை நடத்தியதோடு, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, வீடுதோறும் தேசியக்கொடி ஹர் ஹர் திரங்கா இயக்கத்தில் பங்கேற்றனர். ஜம்முவிலுள்ள கன்பத் பாலமும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரத்தில் ஜொலித்தது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தீவிரவாதிகளின் சகோதரர்கள் இருவர், தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றியதுதான் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது. தோடா மாவட்டம் சோபோரைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஜாவித் முட்டூ. இவரது சகோதரர் ரயீஸ் முட்டூ, சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி, அதை காணொளியாக எடுத்து இணையத்திலும் பகிர்ந்திருந்தார்.
அப்போது, தனது இதயப்பூர்வமாக தேசியக்கொடியை ஏற்றியதாகத் தெரிவித்த ரயீஸ் முட்டூ, தற்போது ஆகஸ்ட் 14-ம் தேதியான இன்று நான் எனது கடையில் அமர்ந்திருக்கிறேன். ஆனால், இதற்கு முன்பு சுதந்திர தினத்துக்கு 3 முதல் 4 நாட்கள் கடைகள் மூடப்பட்டிருக்கும். முன்பிருந்த அரசியல் விளையாட்டுக்கள் தற்போது இல்லை என்று பெருமையுடன் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், மற்றொரு தீவிரவாதியின் சகோதரரும், தனது குடும்பத்துடன் தேசியக்கொடி ஏற்றி இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதே தோடா மாவட்டத்தைச் சேர்ந்தவன் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி இர்ஷாத் அகமது. இவனது சகோதரர் பஷீர் அகமது. இவர்தான், சுதந்திர தினத்தையொட்டி, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார்.
இதுகுறித்து பஷீர் அகமது கூறுகையில், “எனது சகோதரர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததால் எனது தாயார் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனது தந்தையும், நாங்களும் எனது சகோதரருக்காக கவலைப்படுகிறோம். இந்த நாடு நம்முடையது. நாம் அனைவரும் இந்தியர்கள். இந்த நாட்டுக்காக நாங்கள் உயர்த் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த தேசியக் கொடி நமது பெருமை” என்று கூறியிருக்கிறார். இந்த காணொளியும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.