நீதிமன்றத் தீர்ப்புகள், உத்தரவுகள், வாதங்கள் ஆகியவற்றில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பெண்களுக்கு எதிராக தவிர்க்க வேண்டிய சொற்கள் அடங்கிய கையேட்டை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிட்டிருக்கிறார்.
டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கையேட்டை வெளியிட்டுப் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளில் பெண்களை புண்படுத்தும் வகையிலான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுப்புத்தியில் பயன்படுத்தப்படும் இதுபோன்ற சொற்கள் முறையற்றவை. இதுபோன்ற சொற்களை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட அதுபோன்ற சொற்கள் இந்தக் கையேட்டில் இடம்பெற்றிருக்கின்றன.
இச்சொற்கள் தொடர்பாக நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த கையேடு வெளியிடப்பட்டிருக்கிறது. இவை உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதனால், மேற்கண்ட தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோ, கேள்வி எழுப்புவதோ இதன் நோக்கம் அல்ல. பெண்களுக்கு எதிரான சொற்கள் கவனக்குறைவாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுவதுதான் நோக்கம்.
அதேபோல, நாம் ஒவ்வொருவரும் பதவியேற்கும்போது அச்சம், தயவு அல்லது எவ்வித விருப்பு வெறுப்பின்றி கடமையைச் செய்வோம் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறோம். அதன்படி, நீதி கேட்டு வருபவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இல்லாமல், நீதி வழங்க வேண்டும். எவற்றின் அடிப்படையிலும் முன்முடிவுகளுடன் செயல்படக் கூடாது” என்றார்.
மேற்கண்ட கையேட்டில் பெண்களுக்கு எதிராக பரவலாக பயன்படுத்தப்படும் சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதுபோன்ற சொற்களுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய சொற்களும் இடம்பெற்றுள்ளன. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இந்த கையேட்டை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.