ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டின் அரசு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகளில் ஒருவனாக அறியப்படுபவன் யாசின் மாலிக். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்கிற அமைப்பின் தலைவனாக இருந்து வருகிறான். வெளியுலக பார்வைக்கு இந்தியா, பாகிஸ்தானிடமிருந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை பெற்று தனிநாடாக வேண்டும் என்று வலியுறுத்துவது போல் தோன்றினாலும், பின்னணியில் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறான். இதனால் ஜம்மு காஷ்மீர் மக்களே அவனை நம்பவில்லை.
மேலும், ஜம்மு காஷ்மீரில் நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவன். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. இந்து பண்டிட் சமூகத்தினர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தவன் இதே யாசின் மாலிக்தான். அதாவது, ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளில் முக்கியமானவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.
இதையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு இறுதியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சையதின் மகள் ரூபியை சையத்தை பணையக் கைதியாக கடத்தி வைத்துக்கொண்டு, மேற்கண்ட தீவிரவாதிகளை விடுவிக்கும்படி நிர்பந்தம் செய்தான். இதன்படி, முக்கிய தீவிரவாதிகள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள்தான் 1990 தொடக்கத்தில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு வித்திட்டவர்கள்.
இது ஒருபுறம் இருக்க, தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவி செய்து வந்தான். இது தொடர்பான வழக்கில் கடந்தாண்டு யாசின் மாலிக்குக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இது தவிர, முப்தி முகமது சையதின் மகளை கடத்திய வழக்கில், தன்னை கடத்தியது யாசின் மாலிக்தான் என்று ரூபியா சையது அடையாளம் காட்டி இருக்கிறார். இந்த வழக்கிலும் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த நிலையில்தான், தீவிரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் அரசு உயர் பதவியை வழங்கி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக சமீபத்தில் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இடைக்கால பிரதமராக அன்வரல் ஹக் காகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது உதவியாளராகத்தான் முஷால் ஹூசைன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது அமைச்சருக்கு இணையான பதவி என்பது குறிப்பிடத்தக்கது.