நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்டதற்கு ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமது, அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது எக்ஸ் பதிவில், சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியா தொடர்ந்து வரலாறு படைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் பதிவில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது நம்பமுடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா பதிவில், சந்திரயான் 3 வெற்றிக்கும், அறிவியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தில் வரலாற்றுச் சாதனை படைத்ததற்கும் இந்திய பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோ-க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பதிவில், இந்தியாவின் சாதனை மனிதக்குலத்திற்கு வழியைத் திறக்கிறது. இந்த பணி அறிவியலின் சக்தி மற்றும் அறிவியல் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதாக நமக்கு வழங்கும் சிறந்த வாய்ப்புகளுக்கு மற்றொரு சான்றாகும் என்று தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 வெற்றிக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், என்னவொரு அருமையான தருணம், சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா முதல் நாடாக நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கி சாதனைப்படைத்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.