சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத, தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர், கடந்த 1988-ம் ஆண்டு முதல் சித்தன்னவாசல் பூங்காவில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். 10 ஆண்டுகள் தற்காலிக பணியாளராக பணிபுரிந்த இவரைப் பணி நிரந்தரம் செய்யலாம் என அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், ஊரக வளர்ச்சி இயக்குநருக்கு, ஆட்சியர் பரிந்துரை அனுப்பினார். ஆனால், அதன் மீது 16 வருடம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக, கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சிவலிங்கம் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பொன்னையா ஆஜராகவில்லை. விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் 16 ஆண்டுகளாகப் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. எனவே, ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தும், மேலும், இதனை, சென்னை மாநகர் காவல் ஆணையர் வரும் 22-ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.