செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால், முக்கிய நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
24 அடி நீா் தேக்கும் திறன் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டம் 22.35 அடியை நெருங்கியுள்ளது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 9 மணியில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இதனால், குன்றத்தூா், திருமுடிவாக்கம், திருநீா்மலை, கே.கே.நகா், சைதாப்பேட்டை, கோட்டூா்புரம் உள்ளிட்ட இடங்களில் அடையாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.