அயோத்திக்கு பக்தர்கள் விரைவாக செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டடமும், 57 ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகமும் கட்டப்பட உள்ளது.இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவில் 160 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் 25,000 ஹிந்து சாதுக்களும் 136 மடாதிபதிகளும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு விரைவில் செல்லும் வகையில், மத்திய அரசால் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவிலுக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
பாட்னா, அயோத்தி, லக்னோ என மூன்றையும் இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.