தற்போது எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
சர்வதேச பிரச்னைகளை காங்கிரஸ் கூட்டணி அரசை விட, தேஜ., கூட்டணி அரசு சிறப்பாக கையாண்டது. ஐக்கிய முற்போக்குகூட்டணிக்கு குடும்பமே பிரதானம். எங்களுக்கு தேசமே பிரதானம். கோவிட் காலத்தில் பிரதமர் மோடி முன்களத்தில் நின்று பணியாற்றினார். ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.
12 நாட்கள் நடந்த காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடந்த ஊழலை உலக நாடுகள் அறியும். இந்த ஊழலால் ஒட்டு மொத்த தேசமும் வேதனை அடைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த காமன்வெல்த் போட்டி தோல்வியடைந்தது. ஆனால், ஜி20 மாநாடு வெற்றி பெற்றது.
ஐமுகூ., ஆட்சியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேட்டை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. இந்த ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. முந்தைய ஆட்சியின் போது, குட்கா தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்பட்டது.
நிலக்கரி சுரங்கம் அமைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால், நிறுவனங்களால் மின்உற்பத்தி செய்ய முடியவில்லை. தேசம் இருளில் மூழ்கியது.
ஆனால், நாங்கள் பின்பக்க கதவு வழியாக எங்கள் உறவினர்கள் நிலக்கரி சுரங்க உரிமம் பெறுவதை தடுத்தோம். பா.ஜ., ஆட்சியில் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. நிலக்கரியை ஐமுகூ., அரசு சாம்பல் ஆக மாற்றியது. ஆனால், எங்களது கொள்கைகளால் நாங்கள் நிலக்கரியை வைரமாக மாற்றினோம் எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும் போது பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 192%, நிதியுதவி 300%-ம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
“2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ரூ.94,977 கோடி வழங்கப்பட்டது, 2014 முதல் 2023 டிசம்பர் வரை பாஜக ஆட்சியில் ரூ.2.77 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது 192% அதிகம். எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை, நான் தனிப்பட்ட முறையில் முடிவு செய்ய முடியாது.” என கூறினார்.
இதே போன்று, “தமிழ்நாட்டிற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட நிதியை விட பாஜக ஆட்சியில் 300% அதிகம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி பகிர்வு தொடர்பான தகவல்கள் பொதுவெளியில் இருப்பதால், அனைவரும் பார்த்துக் கொள்ளலாம்” என்று விளக்கம் அளித்தார்.