நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழகத்தில் மேற்கெள்ள வேண்டிய பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு கலந்துகொண்டனர். தலைமைத் தேர்தல் ஆணையருடன் துணை ஆணையர் தர்மேந்திர சர்மா, திதேஷ் நியாஸ், அஜய் பாலு ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசனை கூட்டத்தில் அவர்களிடம் இருந்து பரிந்துரைகள், கோரிக்கைகள் பெறப்படும் அதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை துறை அதிகாரிகள். மாவட்ட எஸ்பிக்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளுடன் சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 10 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தமிழகத்தில் உத்தேச தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்தை விதிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல். மொத்தம் இரண்டு நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், இதில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் நடக்க உள்ளது.
இரண்டாம் நாளான நாளை காலை, 9 மணி முதல் 11 மணி வரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆலோசகர் கொண்ட குழு ஆலோசனையை நடத்துகிறது. அப்போது தங்கள் மாநிலங்களின் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படுகிறது.
அதன் பிறகு காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை, ஐடி துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை உள்ளிட்ட பல்வறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. பிறகு தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் பிற்பகல் 2 மணி முதல், 3 மணிவரை ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் குழு திட்டமிட்டுள்ளது.