மத்திய உள்துறை அமித் ஷா குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான நவீன் ஜா ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பான ஆதாரத்தையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தரப்பில் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.