வங்கதேச வன்முறையின் பின்னணியில் சீன பாதுகாப்பு அமைச்சகமும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் இருப்பதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் அரங்கேறிய வன்முறையால் ஷேக் ஹசீனா பதவியைத் துறந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், இந்த வன்முறையில் சீன பாதுகாப்பு அமைச்சகமும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் மூளையாக செயல்பட்டது உளவுத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
வங்கதேச ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஜமாத்- இ-இஸ்லாமி அமைப்பின் மாணவ இயக்கமான இஸ்லாமி- சாத்ர ஷிபிர் பிரிவின் உறுப்பினர்களை ஐஎஸ் இயக்கம் அணுகி, இந்தியாவுக்கு எதிரான அரசு வங்கதேசத்தில் அமைய வேண்டுமென மூளைச்சலவை செய்திருக்கிறது.
இதையொட்டி, ஷேக் ஹசீனா அரசைக் கவிழ்ப்பதற்காக நாடு முழுவதும் வன்முறையைத் தூண்டும் நோக்கில், பல மாதங்களாக இஸ்லாமி- சாத்ர ஷிபிர் அமைப்பு திட்டம் தீட்டியது உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்காக பாகிஸ்தானில் செயல்படும் சீன நிறுவனங்கள், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே இஸ்லாமி- சாத்ர ஷிபிர் அமைப்புக்கு நிதியுதவி அளித்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்தியா- வங்கதேசம் எல்லையில் ஜிஹாதி சிந்தனையை விதைக்க அந்த அமைப்பு திட்டமிடுவதால், எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசுக்கு உளவுத்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.