திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ ஐபிஎஸ் பதவியை பெறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மறைமுகமாக சாடியுள்ளார்.
திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேநேரம் சமூக வலைதளங்களில் சிலர் தம்மை மற்றும் தனது குடும்பத்தினரையும் விமர்சித்து வருவதாக கூறி சீமான் உள்ளிட்டோர் மீது வருண்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமான் சார்பில் விளக்க நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. சீமானுக்கும் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெறும் நிலையில், வருண்குமார் வாட்ஸ் அப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என்றும், இரவு பகலாக ரத்தம் சிந்தி படித்து உழைத்து பெற்ற ஐபிஎஸ் பதவி உயிரைப் போல் நேசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காக்கி மேல் உள்ள காதல் தொடரும் என குறிப்பிட்டுள்ள அவர், பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், தாம் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், தாம் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ என்று கேள்வி எழப்பியுள்ள வருண்குமாரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.