நாடு முழுவதும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த அவதாரம் சிறப்புக்குரியது. கிருஷ்ணரை தங்கள் வீட்டு குழந்தையாக பாவித்து மக்கள் கொண்டாடி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அந்த வகையில், டெல்லியில் உள்ள இஸ்கான் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதிகாலை நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயில் நடை திறந்தபோது பக்தர்கள் பஜனைகள் பாடி பக்தி பரவசமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே சவுபாட்டி பகுதியில் உள்ள இஸ்கான் கோயிலில் அதிகாலை சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கிருஷ்ணன் துதி பாடி பக்தியை வெளிப்படுத்தினர்.