பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளதால் பயனாளிகள் தேர்வு தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள பயனாளிகளில் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்ய வேண்டுமெனவும், தகுதியான புதிய பயனாளிகளை சேர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவாஸ் பிளஸ் மொபைல் போன் செயலியில் பயனாளி முகத்தை படம்பிடித்து அவர் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் இயந்திரங்கள் வைத்திருப்போர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள வரம்பில் கிசான் அட்டை வைத்திருப்போர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல குடும்ப உறுப்பினர் யாரேனும் அரசுப் பணியில் இருந்தாலோ, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினாலோ, வருமான வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தினாலோ, பயனாளிகளாக சேர்க்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் பாசன நிலம் 2 புள்ளி 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல்
வைத்திருந்தாலோ, நீர் பாசனமற்ற நிலம் 5 ஏக்கர் மற்றும் அதற்குமேல் வைத்திருந்தாலோ அவர்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.