ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்றுகட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, ஸ்ரீநகரில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஜம்மு- காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு- காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டுவரை பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்கியதாக தெரிவித்தார். ஜம்மு- காஷ்மீரின் வரலாற்றில் கடந்த பத்தாண்டுகள் பொற்காலமாக நினைவுகூரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு- காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 மீண்டும் நடைமுறைக்கு வராது என சூளுரைத்த அமித் ஷா, இளைஞர்களின் கையில் ஆயுதமும் கற்களும் ஏந்த அந்த சட்டம் வழிவகுத்ததாக விமர்சித்தார்.