பாஜக நிர்வாகிகளுக்கு பாடம் புகட்டுமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதிய நிலையில், அதற்கு பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆட்சேபத்துக்குரிய விதத்தில் பேசியதாகவும், அவர்களுக்கு தார்மீக நெறிமுறைகள் தொடர்பாக பாடம் புகட்டுமாறும் கூறி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுமக்களால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட தோற்றுபோன பொருளுக்கு மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் மெருகூட்ட முயற்சிப்பதாகவும்,
பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கடந்த காலத்தில் 110 முறை ஆட்சேபத்துக்குரிய விதத்தில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பிரதமர் மோடிக்கு கார்கே எழுதிய கடிதத்துக்கும் யதார்த்தத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறிய ஜெ.பி.நட்டா,
சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பிரதமர் மோடியை தரம்தாழ்ந்த முறையில் விமர்சித்ததை மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.