ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழக்கில் இன்று காலை 11 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பிக்கிறது.
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிப்பது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சமூகத்திற்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு கூட கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி எந்த நிகழ்வும் இல்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம் உள்ளது என்றும், திமுகவின் பவள விழாவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியதுபோல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு ஏன் அனுமதி வழங்க கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பதற்றமான பகுதிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை என்றும் 42 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
காவல்துறையின் வாதத்தை கேட்ட நீதிபதி, அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது நகைச்சுவையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றி ஆர்.ஆர்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது பரிசீலிக்கலாம் என குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.
அதன்படி இன்று காலை 11 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.