நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ள உள்ள கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனை அடுத்து, சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஜினிகாந்தின் உடல்நிலை கவலைப்படும்படி இல்லை என அவரது மனைவி லதா கூறியுள்ளார்.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்வதாகவும், இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ள மருத்துவக் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், உடல்பரிசோதனைக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்