மகாத்மா காந்திக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனாலும், அவரது வாழ்க்கைப் பாடத்தையும், விடுதலைப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்களிப்பையும் தியாகங்களையும் அடுத்த தலைமுறையினருக்கு சொல்ல வேண்டியது முக்கியம். பாரத தேசத்தின் தந்தையான, மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாளில் அவர் நினைவைப் போற்றும் விதமாக ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு, சத்தியத்தின் வழியில், கத்தியின்றி ரத்தமின்றி விடுதலை வாங்கித் தந்த மாபெரும் தலைவர் மகாத்மா காந்தி. 1869 ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி, குஜராத் மாநிலத்தின் சிறிய ஊரான போர் பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தில் பிறந்து, தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றி, இந்தியா முழுவதும் பயணித்து சுதந்திர வேட்கையை இந்தியர்களிடம் ஏற்படுத்தி, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போரிட்டார்.
லண்டனில் தனது சட்டப் படிப்பை முடித்த பிறகு, தாதா அப்துல்லா ஜாவேயின் சட்ட விவகாரத்தில் கலந்து கொள்ளத் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அங்கு, பீட்டர் மரிட்ஸ்பர்க்கில் “வெள்ளையர்கள் மட்டும்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அமர்ந்ததற்காக ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார் காந்தி.
இனப் பாகுபாட்டுக்கு எதிராக, நீதியின் குரலாக தனது வாழ்க்கையை காந்தி மாற்ற இந்த சம்பவமே ஒரு திருப்பு முனையாக அமைந்தது.1915 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி இந்திய தேசிய இயக்கத்தின் தலைவரான பின், விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார்.
உடையைக் கூட ஆயுதமாக்கி அரசியல் களத்தில் போராட முடியும் என்று உலகுக்குக் காட்டிய முதல் மனிதர் காந்திதான். முன்பு செல்வச் செழிப்போடு வாழ்ந்த இந்திய மக்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் எப்படி ஏழைகளாக மாற்றப்பட்டார்கள் என்பதைத் தன் உடையின் மூலம் உலகத்துக்குச் சொன்னவர் காந்தி.
அடிமைத்தனத்துக்கு அடிப்படைக் காரணம், மேற்கத்திய உற்பத்தி முறையும் அதனால் விளையும் நுகர்வுக் கலாச்சாரமும்தான் என்பதை காந்தி தன்னுடைய ‘இந்திய சுயராஜ்ஜியம்” நூலில் குறிப்பிட்டு சுதேசி இயக்கத்தை முன்னெடுத்தார்.
சத்தியாகிரகம் என்ற அவரின் தாரக மந்திரம், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தலைவர்களிடமும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது.
1930 ஆம் ‘ஆண்டின் சிறந்த நபர்’ என்று அறிவிக்கப்பட்டதோடு, காந்தியடிகளுக்குப் ‘புனித காந்தி’ என்ற பட்டத்தையும் டைம் இதழ் வழங்கி சிறப்பித்தது.
1942 ஆம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். அந்தக் காலகட்டம் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் கடைசி அத்தியாயமாக அமைந்தது. காந்தியின் ஒத்துழையாமைக்கான அழைப்பு இந்தியா முழுவதும் பரவியது. காந்தியின் “செய் அல்லது செத்து மடி ” என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. மகாத்மா காந்தியின் அகிம்சைப் புரட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தது
1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அதே ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதியை காந்தி ஜெயந்தி என்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்று முதல், காந்தி ஜெயந்தி, இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டாடப் பட்டு வருகிறது.
மகாத்மா காந்தியின் அகிம்சை தத்துவம், அமெரிக்காவில் சிவில் உரிமைகள் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு வரை உலக நாடுகளின் சுதந்திரப் போராட்டங்களின் உத்திகளை மாற்றி அமைத்தது.
நீதியை அடைவதில் காந்தியின் அகிம்சை வழியே ஒரே வழி என்று உலகம் உணர்ந்து கொண்டதன் விளைவாக, 2007 ஆம் ஆண்டு முதல் காந்தி ஜெயந்தியை சர்வதேச அகிம்சை தினமாக ஐ நா சபை அறிவித்தது. அன்று முதல், மகாத்மா பிறந்த நாளை, சர்வதேச அகிம்சை தினமாக உலகம் கொண்டாடி வருகிறது.
உலகளாவிய மோதல்கள், தீவிரவாதம் மற்றும் அரசியல் அமைதியின்மை அதிகரித்துள்ள இன்றைய சுழலில் மகாத்மா காந்தியின் ‘அகிம்சை’ சமகாலத்திற்கு முக்கியத் தேவையாக உள்ளது. தவறான தகவல்களும், போலிச் செய்திகளும் பெருகி வரும் தற்காலத்தில் மகாத்மா காந்தியின் உண்மையும் நேர்மையும் அதற்கான அர்ப்பணிப்பும் சமூக ஊடகங்களுக்கு ஒரு வழிகாட்டி.
நவீன பொருளாதாரக் கொள்கைகளில் கூட இன்றைக்கும், மகாத்மா காந்தியின்,உள்ளூர் உற்பத்தி மற்றும் தன்னிறைவு என்ற கொள்கையே அடிப்படையாக உள்ளது. காலநிலை மாற்றங்கள், புவி சார் குழப்பங்கள், அச்சமூட்டும் இக்காலத்தில், எளிய வாழ்க்கை மற்றும் நிலையான வளங்களைப் பயன்படுத்துவதற்கான காந்தியின் சிந்தனைகளே நல்ல தீர்வாக நிலையான வாழ்வுக்கு வழி காட்டுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, மகாத்மா காந்தி முன்வைத்த “ராமராஜ்யம்” என்பதுதான், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதாகும். அதற்கு அடிப்படை, உண்மை,அகிம்சை,பிரம்மச்சரியம்,களவின்மை,உடைமையின்மை,உடல் உழைப்பு,உணவு கட்டுப்பாடு,அச்சமின்மை,பேதமின்மை, சர்வ சமய நல்லிணக்கம்,மற்றும் சுய சார்பு ஆகியவையே. “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று சொன்ன மகாத்மா காந்தியின் கொள்கையான “காந்தியம்” வெறும் தத்துவமல்ல- வாழ்க்கை முறை.