இலங்கை கடற்படையின் அடக்குமுறையைக் கண்டித்து பாமக சார்பில் வரும் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை இலங்கை அரசு மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வரும் 8-ம் தேதி நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.