சாத்தான்குளம் சம்பவம்போல், செங்கல்பட்டு அருகே கடையில் ரெய்டு என்ற பெயரில் போலீசார் சாதி பெயரைக் கூறி கணவன் – மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கார்த்திகா என்பவருக்கு சொந்தமான கடையில் போதைப் பொருள் உள்ளதா என கடந்த 21 -ம் தேதி போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதனை கார்த்திகாவின் கணவர் வேலு வீடியோ எடுத்துள்ளார். இதனால், அவரது செல்போனை பிடுங்கிய போலீசார், அதில் இருந்த காட்சிகளை நீக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, போலீசாருக்கும், கார்திகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், கார்த்திகாவை தாக்கியதுடன், வேனில் அவரை ஏற்ற போலீசார் முயன்றபோது, அதனை அவரது கணவர் வேலு தடுத்துள்ளார். இதனால், இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சாதி பெயரைச் சொல்லி மிரட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அந்த கடைக்கு அனுப்பி வைத்து, ஹான்ஸ் பாக்கு இருந்ததாக கூறி கடைக்கு சீல் வைத்துள்ளனர் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதியினர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளனர்.
இல்லாத ஒரு பொருளை கடையிலிருந்து எடுத்ததாக பொய் கூறி கடையை போலீசார் மூடியுள்ளனர் எனவும், சாதி பெயரை சொல்லி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.