தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வருகிற 25ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 40 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், கோவை, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூரு, மைசூா் உள்ளிட்ட நகரங்களுக்கு வருகிற 25ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 29, நவம்பர் 5-ந் தேதிகளில் நாகர்கோவிலுக்கும், வருகிற 29, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் கோவைக்கும், வருகிற 30, நவம்பர் 6 ஆகிய தேதிகளில் திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை எழும்பூரில் இருந்து வருகிற அக்டோபர் 30, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு நவம்பர் 2ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலி-பெங்களூரு இடையே நவம்பர் 4ஆம் தேதியும், நாகா்கோவில்-மைசூா் இடையே நவம்பர் 2ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சென்னை, எா்ணாகுளத்தில் இருந்து புதுடெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு நவம்பர் 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.