இஸ்லாமாபாத்தில் நடந்த SCO மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுக்கம் தளர்வதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா,சீனா,ரஷ்யா,பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனை செய்வதற்காக ஆண்டுதோறும் SCO உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 23-வது SCO உச்சி மாநாடு, பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில், இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் , கலந்து கொண்டார்.
காஷ்மீர் பிரச்சனை, தீவிரவாதம், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் என இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வெளியுறவு துறை அமைச்சரின் முதல் பாகிஸ்தான் பயணமாக இது இருந்தது.
இந்த உச்சி மாநாட்டின் போது, செவ்வாய்கிழமை இரவு விருந்தில், ஜெய்சங்கரும், பாகிஸ்தான் பிரதமர் சாபஸ் ஷெரீப்பும் அன்புடன் கைகுலுக்கி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டதாகவும், உரையாடியதாகவும் தெரிய வருகிறது. மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தாரையும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இதனிடையே, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவுகளை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்தியாவின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் பாகிஸ்தான் விரும்புகிறது.
கடந்த புதன்கிழமை SCO உச்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வ மதிய உணவு விருந்தின்போது, இந்திய- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து, நேர்மறையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.
மாநாடு முடிந்து, இஸ்லாமாபாத்தில் இருந்து கிளம்பும் முன், விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்கு நன்றி தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இருநாட்டு உறவு சீர் பெறுவதற்கான ஆரம்ப அடையாளமாக இருந்தது என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே முறையான இருதரப்பு சந்திப்பு நடைபெறவில்லை என்றாலும் இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகை உறைந்துபோன ஒரு பனிக்கட்டியை உடைக்கும் என்று தான் நம்புவதாக பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் ஐநா சபையில், கடுமையாக குற்றச் சாட்டுக்களை இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவர் மீது ஒருவர் வைத்தனர். தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் சபாஸ் ஷெரிப், இந்தியாவுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்திய வெளியுறவு அமைச்சகமும் தக்க பதிலடி தந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் இனி சாத்தியமற்றதாகவே தெரியும் சூழலில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு பாகிஸ்தான் சென்று திரும்பி இருக்கிறார். ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் இறுக்கத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.