சிவகங்கையில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் டீசல் இஞ்சின்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
திருப்புவனம் அருகே ஏனாதியையொட்டி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில், மழையை நம்பி என்.எல்.ஆர், கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கண்மாய் பாசனத்தை நம்பியுள்ள இப்பகுதி விவசாய நிலங்களுக்கு, பூவந்தி, மடப்புறம் கண்மாய்கள் வழியாக ஏனாதி கண்மாய்க்கு வரும் தண்ணீரே பாசனத்திற்கு உதவுகிறது.
ஏனாதி கண்மாய்க்கு வரும் தண்ணீரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாப்பாக்குடி கண்மாய்க்கு திறந்து விடுவது வாடிக்கை. ஆனால் இந்த ஆண்டு பூவந்தி, மடப்புறம் கண்மாய்கள் நிறைந்து 10 நாட்களுக்கு மேலாகியும், பாப்பாக்குடி கண்மாய்க்கு இன்னும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
கடந்த வாரமே நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கண்மாய்களில் இருந்து வரும் தண்ணீர் விவசாய நிலங்களை மூழ்கடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், நெற்பயிர்களும், பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் டீசல் மோட்டார்களும் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டுள்ள விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.