திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக கைது செய்துள்ள பக்தர்களையும், இந்துமுன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் உடனே விடுதலை செய்யவேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் கார்த்திகை ஒன்றாம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக பக்தர்களையும், இந்து முன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்கின்ற ஒரு உத்தரவை 1996 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும்,
ஆனால் நீதிமன்ற உத்தரவை இதுநாள்வரை காவல்துறை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டுள்ளதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆண்டுதோறும் போராடி வருகிறது என்றும் இந்த ஆண்டும் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தட்டிக்கேட்கும், சுட்டிக்காட்டும் மக்களை எல்லாம் வழக்குகள் போட்டு முடக்கிவிடலாம் என நினைப்பது மூடத்தனம் என்பதை தமிழக அரசும் காவல்துறையும் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
உடனடியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திருப்பிப் பெறவேண்டும் எனவும், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பக்தர்களை, இந்துமுன்னணி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அவர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.