ஒற்றுமை நிரந்தரமானது என்பதால் அதனை ஆராய்ந்து வேற்றுமையிலும் ஒற்றுமையை காண வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற அபார வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் களப்பணிகள் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற லோக்மந்த் கிராம நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,
நம் முன்னோர்கள் ஒற்றுமையின் உண்மையை அறிந்தவர்களாகவும், அது எல்லா வகையிலும் சிறந்தது என புரிந்தவர்களாகவும் இருந்ததாக தெரிவித்தார்.
வேற்றுமை சில காலம் மட்டுமே நீடிக்கும் எனவும் இறுதியில் வெறுமை மட்டுமே மிஞ்சும் எனவும் தெரிவித்த மோகன் பகவத், ஒற்றுமை என்பது நிரந்தரமானது எனவும், அதனை ஆராய்ந்து பார்த்தால் வேற்றுமையிலும் நம்மால் ஒற்றுமையை காண முடியும் எனவும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த உலகில் யாரும் யாருக்கும் எதிரி இல்லை எனவும், பிறர் ஆக்கிரோஷமாக நடந்துகொள்வதால் நாமும் அதேபோல் நடந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் சண்டையிடாமல் அவர்களுக்கு தக்க பதிலளிக்க வேண்டியதும் அவசியம் எனவும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.
அமிர்தம் எடுக்க கடலை கடையும்போது விஷம் வெளிப்படுவதுபோல பல்வேறு சவால்களை நாமும் எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்த அவர், விஷம் போன்ற சவால்களை நாம் ஏற்று அமிர்த்தம் என்ற சேவையை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.