செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்றும், அதன் பிறகு, தமிழக கடற்கரையை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து, 30-ஆம் தேதி காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் இருப்பதற்கு, அதன் நகர்வில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.