கட் அவுட் கலாச்சாரத்திற்கு முதலமைச்சர் கெட்அவுட் சொல்லிய பிறகும், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-ல் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நேரில் ஆஜரானார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : பெரும்பான்மையான இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார்சிலையை அகற்றவேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.
பொதுஇடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, தமிழகத்தில் பேனர் மற்றும் சிலை கலாச்சாரம் அதிகரித்துள்ளது, பள்ளி மாணவர்களை பயன்படுத்தி உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வது மேலும் பேனர்கள், கட்டவுட், பிரியாணி விருந்துகள் என உதயநிதி விளம்பரமும் அதிகரித்துள்ளது, இது நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும், முரணாகவும் உள்ளது.
கட்அவுட் கலாச்சாரத்திற்கு கெட்அவுட் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியநிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் மீண்டும் பேனர் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அதேபோன்று நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை பல இடங்களில் திறக்கப்பட்டு உள்ளதும் ஏற்கத்தக்கது அல்ல, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மேலும் கோவில் முன்பு கடவுள் இல்லை என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.