பெண்கள் அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.
குன்னூர் வெலிங்கடன் ராணுவ கல்லூரிக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அங்குள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நீலகிரிக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், குன்னூர் வெலிங்கடன் ராணுவ கல்லூரிக்கு சென்ற அவர், அங்குள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போரில் வீரமரணமடைந்த 8 ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு வீரதீர செயல்களுக்கான கேலன்டரி விருதினை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து உரையாற்றிய குடியரசு தலைவர், தேர்ச்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார். பெண் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், இனி வரும் காலங்களில் அதிகளவிலான பெண்கள் பாதுகாப்பு படையில் சேர வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல் இந்தியா சுயசார்புடன் முன்னேறி வருவதாக கூறிய குடியரசு தலைவர், நாட்டின் வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவில் ராணுவ தளவாடங்களில் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மேக் இன் இந்தியா திட்டமே காரணம் என்றும் திரௌபதி முர்மு கூறினார்.