ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதனையொட்டி குண்டம் இறங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். கடந்த 6-ம் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும், வரும் 12-ம் தேதி தெப்போற்சவமும், 13-ம் தேதி முதல் 17 ம் தேதி வரை மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறவுள்ளது. திருவிழா 18-ம் தேதி மறுபூஜையுடன் நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.