நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் முருகப்பெருமானை வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வட நாட்டில் பிறந்தவர் என்று இணையத்தில் வெளியாகியுள்ள தகவலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வணிகத்துக்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழர்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், இல்லையென்றால் மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு வெளிவந்தால் தமிழ்த் திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை வெளியிடக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பை திரையிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
















