கோயில் காணிக்கையை கூட்டணி அமைத்து கொள்ளையடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீதான புகார்களை முழுமையாக விசாரணையை நடத்தி தண்டனை பெற்று தரவேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை கோனியம்மன், கன்னியாகுமரி ஸ்தாணுமாலையன் கோயில்களில் உண்டில் காணிக்கை மற்றும் பூஜை கட்டணத்தை தந்திரமாக எடுத்த விவகாரத்தில் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில்களில் வேலை செய்ய நியமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் தகுதி இதுதான் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் பக்தர்களின் காணிக்கை தங்கத்தை உருக்கி டெபாசிட் செய்த திட்டத்தில் எத்தனை லட்சம் கோடி முறைகேடு நடந்து இருக்கும் என்பதை இந்துக்கள் உணர வேண்டும் என கூறியுள்ளார்.
கோயில் சொத்துக்கள், வருமானம் மற்றும் தங்க பிஸ்கெட் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்தும் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும்,
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கோயில் காணிக்கையை கூட்டணி அமைத்து கொள்ளையடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீதான புகார்களை முழுமையாக விசாரணையை நடத்தி தண்டனை பெற்று தரவேண்டும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
















