சுதத்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார்.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும், நாட்டுப்பற்றுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடியை, செங்கோட்டையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, முதல்முறையாக ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டு, பிரதமர் மோடி தொடர்ந்து, 13-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கடமைப் பாதையில் முப்படை மற்றும் டெல்லி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.விழாவில் மத்திய அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















