தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் எழுந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக கடந்த ஜூன் 30ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 9 டெண்டர்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரத்து 495 கிலோ மீட்டர் மின்கம்பிகள், ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், 2022-23ஆம் ஆண்டில் சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பிலான மின்கம்பிகள் வாங்கப்பட்ட டெண்டரில், பல நிறுவனங்கள் ஒரே விலையை குறிப்பிட்டதாகவும், மற்றொரு டெண்டரில் 30 நிறுவனங்களுக்கு 111 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டதாகவும், சில டெண்டர்களில் பல்வேறு நிறுவனங்கள் சமர்ப்பித்த ஏல விண்ணப்பங்கள் ஒரே அல்லது ஒரே மாதிரியான ஐபி (IP) முகவரிகளில் இருந்ததாகவும் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சில மின்கம்பிகள் தரம் குறைந்தவையாக இருந்ததால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும், அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் வழக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் தற்போது வரை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், விசாரணை முடிவில் பெயர்கள் சேர்க்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
















