புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி பெற்ற நிலையில், தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் நிலையில், 17-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவும், 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
சுமார் 26 ஆயிரத்து 797 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த், தவெக கூட்டணியில் உள்ள நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் போட்டியிடுகின்றனர்.
திமுக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
















