நேபாள பனிப்பாறை உடைந்து சீறிப் பாய்ந்த பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடருக்கு இந்தியாவிடம் நேபாளம் இழப்பீடு கேட்டுள்ள நிலையில், ஆபத்து நிறைந்த இப்பகுதியில் சீன ஆதரவு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நேபாளம் அனுமதி கொடுத்த உண்மைகள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆகஸ்ட் 26 ம் தேதி நேபாளத்தின் வடக்கு லாங்டாங் பகுதியில் பனிப்பாறை மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில், லெண்டே கோலா, போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
இந்த பேரிடர், குறுகிய இமயமலைப் பள்ளத்தாக்குகளில் நெடுஞ்சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அழித்ததுடன் திபெத்திய எல்லையில் உள்ள கியிராங் துறைமுகத்தையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நதி அமைப்பின் கீழ் பகுதியில் நேபாளம் அமைந்திருந்தால் நேபாளமே இயற்கைப் பேரிடருக்குப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கைப் பேரழிவில் சுமார் 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 5000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப் படுகிறது.
மேலும் அந்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேபாள நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரிடருக்குக் காரணமாக திபெத்-இமயமலைப் பகுதியில் 27 விமானப் போக்குவரத்து சார்ந்த கட்டமைப்புகள், 17 ரயில்வே கட்டமைப்புகள், 33 மலைச் சுரங்கப்பாதைகள் மற்றும் 13 அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் என சுமார் 90 உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் பாதை வழியாக சீனாவுக்கு எதை ஏற்றுமதி செய்வோம்? திபெத்திலிருந்து எதை இறக்குமதி செய்வோம்? எனவே இதற்குப் பதிலாக சாலைகளை அமைப்போம் என்று நேபாளத்தின் முன்னாள் அமைச்சர் மினேந்திர ரிஜால் கூறியிருந்த நிலையில், இந்தப் பேரிடர் நேபாளத்தையே புரட்டிப் போட்டுள்ளது.
நீண்ட காலமாக திபெத் மற்றும் நேபாளத்திற்கு இடையிலான ஒரு வர்த்தகப் பாதையாக விளங்கி வரும் கிரிசாங் பகுதியில் 2014-ல் நவீன எல்லைக் கடப்புப் பாதையை சர்வதேசப் பயன்பாட்டிற்காக சீனா அதிகாரப்பூர்வமாகத் திறந்தது.
2015-ல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், பழைய ஜாங்மு-கோடாரி பாதை கடுமையாகப் பாதித்ததைத் தொடர்ந்து, கியிரோங்-ரசுவாகதி பாதைக்குப் போக்குவரத்து மாற்றப்பட்டதால் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது.
2024-ல் சீனா-நேபாள வர்த்தகத்தில் ஏறக்குறைய 30 சதவீதத்தை கையாண்டு வந்த கியிரோங் பாதை கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக திபெத் செல்லும் இந்தியர்களுக்கு ஒரு முக்கியமான தரைவழி நுழைவுப் புள்ளியாகவும் திகழ்கிறது.
இந்தப் பாதை சேதமடைந்துள்ளதால் இருதரப்பு வர்த்தகம் சுற்றுலா, புனிதப் பயணம் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப் பட்டுள்ளது.
உத்தரகாண்டின் லிபுலேக் பாதை வழியாகவும் சிக்கிமில் உள்ள நாது லா வழியாகவும் கைலாஷ் மானசரோவருக்குச் செல்லலாம் என்றாலும், கியிராங் காத்மாண்டுவுடன் இணைக்கப்பட்டிருந்ததால் மிகப் பிரபலமானது.
குறிப்பாக 2016-ல், கியிராங் வழியாக காத்மாண்டுவிற்கு இரயில் பாதை அமைக்கும் திட்டத்தை சீனா முன்வைத்தது. 2018-ல், இதை பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துடன் இணைத்தது. 2019-ல் நடைபெற்ற இரண்டாவது பெல்ட் அண்ட் ரோடு திட்டங்களில் பட்டியலிடப்பட்ட இந்த இரயில் பாதை, சீனாவின் இரயில் நெட்வொர்க்கை திபெத்தின் ஷிகட்சேயிலிருந்து சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியிராங் வரை நீட்டித்தது.
நேபாளத்தின் காத்மாண்டு, நுவாகோட் மற்றும் ரசுவா மாவட்டங்களை இணைக்கும் 72 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயில் பாதையில் சுமார் 98.5 சதவீதம் சுரங்கங்கள் மற்றும் பாலங்களாக அமைக்கப் பட உள்ளது. செங்குத்தான, நில அதிர்வு மிகுந்த இமயமலைப் பகுதி வழியாகச் செல்வதால் சிக்கலான பொறியியல் பணிகளால் இந்த இரயில் பாதை கட்டமைக்கப்பட உள்ளது.
2018-ல் நேபாளத்தின் மொத்த ஆண்டு அரசு வருவாய்க்குச் சமமாக நேபாளப் பகுதியின் இந்த ரயில் பாதை செலவு 2.75 பில்லியன் டாலராக மதிப்பிடப் பட்டுள்ளது.
கோவிட் காலத்துக்குப் பிறகு 2022-ல் கள ஆய்வுகளை முடித்துவிட்டு, அதற்கான அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் சீனா ஈடுபட்டது.
கடனாக அல்லாமல், மானியமாகவே இந்த ரயில்வே திட்டத்திற்குச் சீனா நிதியளிக்க வேண்டும் என்று நேபாளம் கோரிக்கை வைத்த நிலையில் கட்டுமானத்திற்கான முழுச் செலவையும் ஏற்பதாகப் பெய்ஜிங் உறுதியளிக்கவில்லை.
இந்த ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி சிவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு Upper Trishuli-3B நீர்மின் திட்டப் பகுதியில், China Railway நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட சுரங்கப் பணி நிபுணர் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
நேபாள வெள்ளம், சீனாவுக்கான நேபாளத்தின் முக்கிய சாலைப் பாதையைச் சிதைத்துள்ளதுடன், BRI-யின் இமயமலைத் திட்டங்களுக்கும் தடை ஏற்படுத்தியுள்ளது.
காத்மாண்டு-திபெத் இரயில் பாதையை, மென்மையான இமய மலைப் பகுதியில் அமைக்கப்பட வேண்டுமா என்பதை சீனாவும் நேபாளமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
















