தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால், 9 ஆயிரத்து 576 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 2023-ஆம் ஆண்டு மார்ச் வரை, தமிழகத்தின் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன், 35 ஆயிரத்து 36 மெகாவாட்டாக இருந்தது என்றும். ஆனால், மின் உற்பத்தி திறன், 7 ஆயிரத்து 175 மெகாவாட்டாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ததால் ஆண்டுதோறும் இழப்பு ஏற்பட்டது என்றும், 9 ஆயிரத்து 576 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி 1.62 லட்சம் கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை விரிவாக்க மின் நிலையத்தின் குறைவான செயல் திறனால் 131 கோடியே 58 லட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பற்றாக்குறை காரணமாக அதிக விலைக்கு நிலக்கரியை கொள்முதல் செய்ததால் மின்வாரியத்திற்கு 3 ஆயிரத்து 941 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















