திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டியை, திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் தலைவரும், தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநருமான மது தொடங்கி வைத்தார்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த 9 ஆம் தேதி தொடங்கின. அதன் ஒரு பகுதியாக, இன்று டென்னிஸ் போட்டி தொடங்கியது. அதனை, திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கத் தலைவரும், தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநருமான மது தொடங்கி வைத்தார்.
அவருக்கு, திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்க நிர்வாகிகள் நினைவுப்பரிசும், பொன்னாடை அணிவித்தும் கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கத்தைச் சேர்ந்த கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட டென்னிஸ் சங்கத் தலைவர் மது, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறினார்.
விளையாட்டு துறை மிகவும் சிறந்த துறை என்று கூறிய அவர், விளையாட்டு மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
திருச்சியில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் இருந்து பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஒற்றையர் பிரிவில் 32 அணிகளும், இரட்டையர் பிரிவில் 11 அணிகளும் பங்கேற்றுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகள், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெறுவார்கள்.
















