திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
முத்துப்பேட்டை ஜாம்புவானோடை சிவன் கோயில் பகுதியில் இந்து முன்னணி சார்பில் 34-ம் ஆண்டு வெற்றி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. . இதில் திரைப்பட இயக்குநர் மோகன், ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 6 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், 19-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பாதுகாப்புக்காக 8 மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், தம்பிக்கோட்டை கீழ்பாலம் பாமணியாற்றங்கரையில் நிறைவடைந்தது.
ஓசூரில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சந்திரம்பிகை ஏரியில் கரைக்கப்பட்டன.
இந்த ஊர்வலத்தைக் காண ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பாதுகாப்புப் பணியில் கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 650 போலீசார் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூரில், 21 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம் மேளதாளங்கள் மற்றும் செண்டை மேளங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது. 36-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில், பள்ளி மாணவ, மாணவிகளின் கோலாட்டம் மற்றும் இளைஞர்களின் நடனம் இடம்பெற்றது.
சிங்கவரம் சாலை, காந்தி பஜார் வழியாக திண்டிவனம் சாலையை அடைந்த விநாயகர் சிலை, அங்கிருந்து புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
















