ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன், விதர்ஷா வினோத் மற்றும் சோனம் உத்தம் மஸ்கர் ஆகியோருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த சிறப்பான சாதனை, இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்ததுடன், நாட்டிற்கு பெருமையையும் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,சிறப்பான செயல்பாட்டால் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில், இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், சோனம் உத்தம் மஸ்கர் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது பெருமையளிப்பதாக கூறியுள்ளார்.
வீரர்களின் கடின உழைப்புக்கும், கூட்டு முயற்சிக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த வெற்றி எதிர்வரும் காலங்களில் பல விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
















