இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடைசெய்யவும், வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். மேலும் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஐரோப்பிய நாடான, இத்தாலியில் புலம்பெயர்ந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அந்த எண்ணிக்கை மேலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டில் தேசிய சவாலாகவும் முக்கிய பாதுகாப்புப் பிரச்சனையாகவும் மாறியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் கட்சி என்ற பெருமையை பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தேசியவாத-பழமைவாதக் கட்சியான ‘பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ கட்சி பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி முதல் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் எல்லாம் மெலோனியின் தேசியவாத-பழமைவாதக் கட்சியான ‘பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ கட்சி யை விட ‘நேஷனல் ஃபியூச்சர்’ (FN) கட்சிக்கு செல்வாக்கு வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. .
ஏற்கெனவே கடந்த ஜூலையில் இத்தாலிப் பள்ளிகளில் புர்கா அணிவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ‘நேஷனல் ஃபியூச்சர்’ கட்சி வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ரோம் நகரில் இத்தாலியின் தேசியவாத-பழமைவாதக் கட்சியான ‘பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இத்தாலிக்கு வந்து தங்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் எவரும் இத்தாலி மொழியைக் கற்க வேண்டும் என்றும், இத்தாலிக் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும், அதுவே வெளிநாட்டினரை வரவேற்பதற்கான ஒரே முறையான வழி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தாலிப் பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடைசெய்யும் ஒரு சட்ட நடவடிக்கையைத் தனது அரசு விரைவில் கொண்டு வரும் என்றும் மெலோனி உறுதியளித்துள்ளார்.
புர்கா என்பது முஸ்லிம் பெண்கள் அணியும், கண்கள் உட்பட முகம் முழுவதையும் மறைக்கும் ஆடையாகும். நிகாப் என்பதும் அதே போன்றதுதான், ஆனால் அதில் கண்கள் தெரியும். இத்தாலியில் இவ்விரு வகை ஆடைகளுக்கும் நேரடித் தடை ஏதுமில்லை.
ஆனால், 1975-ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட சட்டத்தின்படி, தகுந்த காரணமின்றி ஒருவரை அடையாளம் காண்பதைக் கடினமாக்கும் வகையிலான தலைக்கவசங்கள் அல்லது ஆடைகளை அணிவது தடை இத்தாலியில் செய்யப்பட்டுள்ளது.
மத அல்லது கலாச்சார காரணங்களுக்காக முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியலாம் என்றும், ஆனால் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டிய சூழலில் முகம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் 2008-ல் வெளியான இத்தாலி நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
2011-ல் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு நாடு தழுவிய தடையை அறிமுகப்படுத்திய முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றது. அதே ஆண்டு பெல்ஜியதிலும் புர்கா மற்றும் நிகாப் ஆடைகளுக்கு நாடு தழுவிய தடை அறிமுகப்படுத்தப்பட்டது. 2016-ல் பொது இடங்களில் முழு முகத்திரைகளுக்கு பல்கேரியாவும் தடை விதித்தது.
2017-ல் நாடு தழுவிய அளவில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கு தடையை அமல் படுத்திய ஆஸ்திரியாவில், செப்டம்பர் 14ம் தேதி முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பள்ளியில் தலையை மறைக்கும் இஸ்லாமிய ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2018-ல், புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட ஆடைகளை உள்ளடக்கிய, பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு நாடு தழுவிய தடையை டென்மார்க்கும் அறிமுகப்படுத்தியது.
2019-ல் பொது இடங்களில் முழுமையான தடையை விதிப்பதற்குப் பதிலாக, பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் மட்டும் இஸ்லாமிய ஆடைகளுக்கு நெதர்லாந்து தடை விதித்தது.
தேசிய பொது வாக்கெடுப்பு நடத்தி, மக்களின் ஒப்புதல் பெற்று பொது இடங்களில் இஸ்லாமிய ஆடைகள் அணிவதை 2023-ல் சுவிட்சர்லாந்து தடை விதித்தது.
கடந்த ஆகஸ்டில் போர்ச்சுகலும் பொது இடங்களில் புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட ஆடைகள் அணிவதைத் தடைசெய்யும் சட்டத்தை அமல் படுத்தியது.
ஜெர்மனியில் நாடு தழுவிய முழுமையான தடை எதுவும் இல்லை என்றாலும் அந்நாட்டில் பல மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
ஸ்வீடனில் இஸ்லாமிய ஆடைகளுக் தேசிய அளவில் தடை எதுவும் இல்லை என்றாலும் சில நகராட்சிகளி் பள்ளி அளவில் புர்கா மற்றும் நிகாப் ஆகிய உடைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
ஸ்பெயினிலும் நாடு தழுவிய தடை எதுவும் இல்லை என்றாலும் ஒருசில மாநிலங்கள் மற்றும் நிறுவன விதிகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
எனவே, ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய ஆடைகளுக்கான தடை என்பது இப்போது இத்தாலியிலும் பள்ளிகளில் கொண்டு வரபடப் உள்ளது.
இத்தாலியில் கொண்டு வரவுள்ள சட்ட முன்மொழிவு குறிப்பாக புர்கா மற்றும் நிகாப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. தலைமுடியையும் கழுத்தையும் மூடினாலும், முகம் மட்டும் திறந்திருக்கும் ஹிஜாப் பற்றி
குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















